Saturday, 18 August 2012

பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன் பாகம் - 1

பூக்கும் கருவேலம்--பூமணியின் படைப்புலகம்

 விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு ' ' வெக்கை ' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' என்ற சிறுகதைதொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ , பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப்படைப்புகள் அவை.அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்புவாதத்தின் உச்சங்களை தொட்டமையினால் தான் தமிழில் தொடர்ந்து அடுத்தகட்ட எழுத்துக்கள்,----யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றை தொகுத்துக் கூறலாம் ---பிறக்க முடிந்தது.


தமிழ் இயல்புவாதமும் பூமணியும்

தமிழின் முதல் இயல்புவாதப் படைப்பு எது ? இதற்கு பதில் பலவகைப்படலாம் என்றாலும் முக்கியமான ,இலக்கண சுத்தமான ,முன்னோடியான, இயல்புவாதப் படைப்பு ஆர் ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் தான் என்பது வெளிப்படை. இயல்புவாதத்தின் இலக்கணம் என்ன ? துல்லியமான தகவல்கள் ,விமரிசனப்பாங்கற்ற சித்தரிப்பு நடை , முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்பு தன்மை கொண்ட ] கதையாடல் என்று சிலவற்றைகூறலாம்.மேற்கே இயல்புவாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது.அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ அழகியல் நெறிகளையோ கூட கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.
எனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை .அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது அப்பட்டமானவையேயாகும்.கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும் ,அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள் [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே ,உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே] ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை ,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது .அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன்வைத்ததும் ,விமரிசன பூர்வமாக நிறுவியதும் க நா சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.
நாகம்மாளுக்கு பிறகு நீல பத்மனாபனின் 'தலைமுறைகள் ' , 'உறவுகள் ' இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ' புத்தம் வீடு ' அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க நா சு வைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து முன்வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே.பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை.ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும் ' இதற்கு முன்னோடியாக இருந்தது.[கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும் ,செயற்கையாக உண்டு பண்ணப்பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 ல் .] செ.கணேச லிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்தி கைலாசபதி ,சிவத்தம்பியும் இவ்வடிவத்தை பிரச்சாரம் செய்தனர் .இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக்விஜயம் அமைந்தது.இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த ] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.
சோஷலிச யதார்த்தவாதம் என்பது [ ரகுநாதனைப்போலவே எனக்கும் ] இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி . ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க நா சு மரபுக்கு கடுமையான அவநம்பிக்கை இீருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்தவாதம் ஒரு வகை திரிபுநிலையாக , கலையில் அரசியலின் அத்துமீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
நாகம்மாள் ,தலைமுறைகள் ,பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [ வடிவவாத ] விமரிசகர்களால் போற்றப்பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் மூன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத்தன்மை உருவாவதற்கோ , எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப்பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள் .முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி ,எல்லார்வி ,சாண்டிலயன்,பி வி ஆர் ரக ' அதி சுவாரசியக் ' கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன்வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.
க நா சு வுக்கும் ,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகை படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது.குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களை பார்க்கும்போது. ' பிறகு ' விற்கு பிறகு நம் இயல்புவாத மரபில் பல முகியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்புவாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி .கந்தர்வன் போன்றுசில விதிவிலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன்[ சிதைவுகள் , பாய்மரக்கப்பல் ] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர்,சுடுமணல் ,சாயத்திரை ] சி ஆர் ரவீந்திரன்[ ஈரம் கசிந்த நிலம் ] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள் ] ஆகியவர்களையும் ; அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ ஏறு வெயில் ,நிழல் முற்றம், கூளமாதாரி ] இமையம் [ கோவேறு கழுதைகள் ,ஆறுமுகம்] சோ .தருமன் [தூர்வை ]ஸ்ரீதர கணேசன்[ உப்புவயல் , வாங்கல் ,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாக சொல்லலாம் .இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனரென்பது விமரிசன ரெரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது..அவ்வகையில் பார்த்தால் ஆர் . சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டுவிட்டார்கள் என்பதைக் காணாலாம்.இன்று வெ சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத்தான்.

No comments:

Post a Comment