பூமணியின் “வெக்கை”
வெக்கை எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று.
ஒரு கொலையோடு ஆரம்பிக்கிறது கதை. ஒரு சிறுவன் தன அண்ணனைக் கொன்ற ஒருவனை போட்டுத் தள்ளுகிறான். அப்புறம் கதை பூராவும் அவனும் அவன் அப்பாவும் ஓடி ஒளிவது மட்டும்தான். கதையில் வேறு ஒன்றுமே கிடையாது.
ஆனால் கதை பூராவும் தெரிவது அன்பு. அப்பாவுக்கும் பையனுக்கும், பையனுக்கும் அண்ணனுக்கும், சித்திக்கும் பையனுக்கும், மற்ற உறவினர்களுக்கும் எல்லாருக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. குடும்பம், சுற்றம், உறவினர்கள், பங்காளிகள், சாதி சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவு; வாழ்க்கையின் தவிர்க்க முடியாத சமரசங்களின் ஊடாகவும் தெரியும் அன்பு. ஒரு கொலை, பழி வாங்குதலை foreground-இல் வைத்து அதில் அன்பை மட்டும் காட்டி இருப்பது பூமணியின் சாதனை.
சுவாரசியத்துக்கும் குறைவே இல்லை. கதை பூராவும் ஒளிந்து வாழும்போது என்ன சாப்பிடுகிறார்கள், என்ன சமைக்கிறார்கள் என்றுதான் – ஆனால் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாது.
தமிழின் சாதனைகளில் ஒன்று. இதை மொழிபெயர்ப்பது கஷ்டம், ஆனால் சரியானபடி மொழிபெயர்த்தால் உலகம் முழுதும் பேசப்படும்.
http://siliconshelf.wordpress.com/2010/10/13/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/
வெக்கை
எடுத்த எடுப்பில் கதை ஆரம்பித்துவிடுகிறது. சர்வ சாதாரணமாக ஒரு கொலை நிகழும் காட்சியுடன் கதை துவங்குகிறது.
செய்தது ஒரு பாதகச் செயல் என்ற உணர்வே அந்தப் பதினைந்து வயதுச் சிறுவனுக்கு (சிதம்பரம் – பேச்சு வழக்கில் செலம்பரம்) இல்லை. வெட்டியதால் கூர் மழுங்கிவிட்ட அரிவாளைப் பற்றிக் கவலை கொள்கிறான்! அரிவாளைப் பதம் போட்டுக் கொடுத்த ஆசாரியின் தொழில் திறமையை மனதிற்குள் மெச்சிக் கொள்கிறான்!!
செலம்பரத்தின் அய்யாவோ, அம்மாவோ, மாமாவோ அதையொரு குற்றமாகவே கருதுவதில்லை. கொலைக்கான காரணம் நாவலில் விரியும்போது அவர்களின் மனநிலை புரிய வருகிறது.
பதினைந்து என்பது ரெண்டுங்கெட்டான் வயது. கொலை செய்யுமளவு துணிவுள்ள அவனுக்குச் சிறுவர்களுக்கே உரித்தான விளையாட்டுக் குணமும் (அண்ணனுடன் கிட்டி விளையாடிய நாட்கள், ஓலையில் மோதிரம் செய்து கொடுப்பது குறித்து எண்ணுவது) பதிவு செய்யப்பட்டிருப்பது முக்கியமான ஒன்று.
‘வெக்கை எதார்த்தமாகப் பிறந்ததுதான். பெரிய பின்னணி எதுவும் கிடையாது. நானறிய நடந்த கதை. பசுமையான இலையைப் பூச்சி கொறித்தது போல் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களைக் கோர்த்து அவனது மனவெக்கையுடன் சொல்லனுமென்று ரெம்ப நாளாக எனக்குள் ஒரு துடிப்பு. மலங்காடு, மயானம், கண்மாய், அய்யனார் கோயில் என்று நான் சுற்றித் திரிந்த எனது இளமைக்கால அனுபவங்களைக் கொலைச் சம்பவத்துடன் பொருத்திப் பார்த்தேன். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எழுத முடிந்தது. கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான் – பூமணி வெக்கை நாவல் பற்றி.
இந்த நாவலில் நிறையக் கதைமாந்தர்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு பேருக்கு மட்டுமே பெயர்கள் உள்ளன (நான் படித்தவரையில்) – சிதம்பரம், அவனுடைய மாமன் மகள் சானகி. மீதி எல்லோரும் அண்ணன், அய்யா, ஆத்தா, மாமா, அத்தை, வடக்கூரான் இத்யாதி. முழுக்க முழுக்க அந்தச் சிறுவனின் தரப்பிலிருந்தே கதையைச் சொல்ல வேண்டுமென்ற ஆசிரியரின் எண்ணம் நிறைவேறி இருப்பதற்கு இது ஒரு சான்று.
மலையாளத் திரைப்பட இயக்குநர் பத்மராஜனின் முதல் படமான ‘பெருவழி அம்பலம்’ வெக்கையின் சாயல் கொண்டது – பூமணி கட்டுரைகளின் பதிப்புரையில் சந்தியா நடராஜன்.
இந்த நாவலின் புறவயச் சித்தரிப்புகள் அபாரம். விதவிதமான செடிகள், பறவைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சோ. தர்மனின் கூகை நாவலில் கொலை செய்துவிட்டு மறைந்துவாழும் அப்புச் சுப்பன் கதாபாத்திரத்திரமும் இந்த நாவலைப் படித்துக் கொண்டிருந்தபோது நினைவுக்கு வந்தது.
*
http://ramamoorthygopi.blogspot.com/2011/12/blog-post_16.html
Very nice & good narration of characters
ReplyDelete